உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கார்ல்சனை வீழ்த்தி இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்தார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட் ஸ்லாம் (ரேபிட்) போட்டியில், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மாக்னஸ் கார்ல்சனை நான்காவது சுற்றில் தோற்கடித்து சாதனை படைத்தார். வெள்ளை காய்களுடன் இன்று விளையாடிய பிரக்ஞானந்தா, 39 நகர்வுகளில் இந்த அற்புதமான வெற்றியைப் பதிவு செய்தார். இதனால் 4.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா முதலிடத்தில் உள்ளார்
சென்னையைச் சேர்ந்த 19 வயது இளம் வீரரான பிரக்ஞானந்தா, 16 வயதில் நார்வேயைச் சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை 2022-ம் ஆண்டு ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் தொடரில் முதன்முறையாக வீழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தியவர். அப்போது, 39 நகர்வுகளில் கார்ல்சனை தோற்கடித்து, உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவராக பிரக்ஞானந்தா புகழடைந்தார்.
இந்த முறையும், லாஸ் வேகாஸில் நடந்த இந்தப் போட்டியில் தனது புத்திசாலித்தனமான ஆட்டத்தின் மூலம் உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் வெற்றிபெற்ற பிரக்ஞானந்தாவுக்கு பலரும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.