தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் ஆக.25-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கிடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த சட்டமன்றத் தேர்தலை தமிழக வெற்றிக் கழகம் சந்திக்க தயாராகி வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்கட்சியின் சார்பில் முதல் மாநாட்டை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் நடத்தினார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நடைபெறும் என்று விஜய் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரை கூடக்கோவில் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு நடத்தப்பட உள்ளது. இதற்கான முதல்கட்டமாக பந்தல்கால் நடும் விழா இன்று அதிகாலை நடைபெற்றது.
இந்த விழா தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். எளிமையான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மாநில மாநாட்டிற்கன பந்தல்கால் நடப்பட்டது.
இந்த நிலையில் மாநாடு நடைபெறும் தேதியை தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம் என்று கூறியுள்ளார்.