லண்டனில் புறப்பட்ட சில வினாடிகளிலேயே விமானம் தரையில் மோதி வெடித்து தீப்பற்றி எரிந்ததில் நான்கு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இங்கிலாந்து தலைநகரான லண்டன் சௌத்தெண்ட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நெதர்லாந்தை நோக்கி பீச்க்ராஃப்ட் சூப்பர் கிங் ஏர் லைட் என்ற சிறிய ரக விமானம் பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. ஆனால், சில வினாடிகளிலேயே திடீரென செயலிழந்த அந்த விமானம் வேகமாக தரையில் மோதியது.
இதனால் விமானம் வெடித்து தீப்பற்றி எரிந்தது. விமானத்தில் இரண்டு பணியாளர்கள் மற்றும் இரண்டு பயணிகள் இருந்ததாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் நான்கு பேரும் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.
விமானம் தரையில் மோதி வெடித்த போது மேலெழும்பிய புகை பல கிலோமீட்டர் தூரத்திற்கு தென்பட்டதாக அப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகின்றனர். கடந்த மாதம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் இதேபோல புறப்பட்ட சில நிமிடங்களில் செயலிழந்து விழுந்து வெடித்த சம்பவத்தில் 260 பேர் உயிரிழந்துள்ள நிலையில், லண்டனில் அது போல ஒரு விபத்து நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.