மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று அதிகாலை அரோகரா முழக்கங்களுக்கிடையே குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
முருகனின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திகழ்கிறது. இந்த கோயிலில் ரூ.23 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்றன. இதனையடுத்து கோயில் குழுமுழுக்கு நிகழ்வுகள் கடந்த 10-ந் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு மூலவர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இன்று (ஜூலை 14) அதிகாலை 3.45 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து அதிகாலை 4.30 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய தங்க, வெள்ளிக் குடங்களில் மங்கள வாத்தியங்கள் முழங்க புனித நீர் ராஜகோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அதிகாலை 5.30 மணிக்கு ராஜகோபுரம், வல்ல கணபதி விமானம் மற்றும் கோவர்த்தனாம்பிகை விமானம் ஆகியவற்றின் கலசங்களில் புனித நீரால் குடமுழுக்கு நன்னீராட்டு நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து பக்தர்கள் மீது 10 டிரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது, 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் கட்டண தரிசனம் கிடையாது .பொது தரிசனம் மட்டுமே என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.