கோயில் காவலாளி அஜித்குமார் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த சம்பவத்தில் 5 போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயிலில் தற்காலிக ஊழியர் அஜித் குமார்(29) திருட்டு வழக்கில் ஒன்றில் தனிப்படை போலீசார் 28.6.2025 அன்று அவரை கைது செய்து அடித்து உதைத்தனர்.
மறுநாள் அஜித்குமார் இறந்து விட்டார். இதையடுத்து 6 போலீசார் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் அஜித் குமாரின் உடல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. வழக்கமாக ஒரு மணி நேரம் நடக்கும் பிரேத பரிசோதனை 5 மணி நேரமாக நடைபெற்றது.
பிரேத பரிசோதனை அறிக்கையில் உடலில் 18 இடங்களில் வெளிக்காயம் மட்டுமல்லாமல் உள் காயங்களும் ரத்தம் கசிவும் இருந்தது குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் இரு காதுகளிலும் ரத்தம் உறைவும், இரத்த கசிவும் இருந்ததும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த உடனேயே திருப்புவனம் காவல் நிலையத்தில் வழக்கு எண் 303/2025 ன் படி கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு ராஜா, ஆனந்த், சங்கர மணிகண்டன், பிரபு, கண்ணன் ஆகிய 5 தனிப்படை போலீசார் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து தனிப்படை போலீசார் 5 பேரையும் திருப்புவனம் போலீசார் கைது செய்தனர். அஜித்குமார் லாக்கப் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட 5 போலீஸாரும் திருப்புவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 5 போலீசாரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் 5 போலீசாரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிவகங்கை மாவட்டத்தில் 28.06.2025 அன்று ஒரு வழக்கு குறித்த விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்பவரின் இறப்புத் தொடர்பாக, ஆறு காவல் ஆளிநர்கள் உடனடியாக 28.06.2025 அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். காவல் நிலைய மரணம் தொடர்பான வழக்குகளில் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்பட்டு உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நடைமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட, பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் இன்று இரவு கிடைத்தவுடன் எந்த காலதாமதமும் இன்றி. உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன், இவ்வழக்கை கொலை வழக்காக சட்டப்பிரிவுகளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து காவல் ஆளிநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.