தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 2,230 போலீஸாரை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடுஅரசின் சார்பில் நிர்வாகக் காரணங்களுக்காக அவ்வப்போது பல்வேறு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் தமிழ்நாடு காவல்துறைக்குள்ளும் அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஏற்கெனவே 4 ஐஜிக்கள், 2 டிஐஜிகள், 29 எஸ்பிக்கள், 40 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், 2,230 போலீஸாரை பணியிட மாற்றம் செய்ய டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
நிர்வாக காரணங்கள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்கள் , சர்ச்சையில் சிக்கியது தொடர்பான அடிப்படையில் கடந்த சில நாட்களாக காவல்துறையில் பணியிட மாற்றங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் கீழ்நிலை காவலர்கள் வரை பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இன்னும் பல ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் காவல்துறையில் பரபரப்பு நிலவுகிறது.