அஜித்குமார் வழக்கின் முக்கிய குற்றவாளியான நிகிதாவை கைது செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் காட்டுமன்னார்கோயிலில் கலியபெருமாள் மற்றும் ஆனைமுத்து ஆகியோரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அப்போது மேடை அருகே அமைக்கப்பட்டிருந்த கலியபெருமாள் மற்றும் ஆனைமுத்து, இளையபெருமாள் ஆகியோரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதன்பின் சீமான் பேசுகையில்," இந்நாட்டில் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் தான் அதிகம், அவர்களுக்கு அதிகாரம் இதுவரை வழங்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைக்க வேண்டும். வரும் 8-ம் தேதி எனது தலைமையில் அஜித் உயிரிழப்பு தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பாக திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது" என்றார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அஜித் குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக நிகிதாவை சேர்த்து அவரை கைது செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும். காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமார் தாயாரைச் சந்தித்து விட்டு போராட்டதை தொடருவோம. தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் நிவாரணமாக 10 லட்ச ரூபாயை அரசு தருகிறது. ஆனால், காவலர்கள் தாக்கி உயிரிழந்தால் 5 லட்ச ரூபாய்தான் தருகிறது. எளிய மகன் நானே எங்கள் அம்மாவிற்கு 5 லட்ச ரூபாய் தருகிறேன். இதுதான் தமிழ்நாட்டில் ஒரு உயிருக்கு மதிப்பா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.