உச்சகட்ட மன உளைச்சலில் காவல்துறை அதிகாரிகள்...
அதிர்ச்சியில் ஆளும் அரசு!
எஸ்.பி. பதவி உயர்வு பெற்ற ஓராண்டில் காவல்துறை பணியே தேவை இல்லை என எஸ்பி அருண் விருப்ப ஓய்வில் சென்றது தமிழக காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உயர் அதிகாரிகளின் அழுத்தம் மற்றும் ஆளும்கட்சி பிரமுகர்களின் அடாவடியால் காவல் துறை அதிகாரிகள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாக வேதனைப்படுகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க திறமையானவர்களுக்கு சிறப்பான பணியிடம் ஒதுக்காததும் பல அதிகாரிகள் மத்தியில் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவர் அருண். இவர் டிஎன்பிஎஸ்சி 2012ம் ஆண்டு நடத்திய குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி பதவியை தேர்வு செய்தார். பயிற்சிக்கு பிறகு கடந்த 12 ஆண்டாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் டிஎஸ்பி மற்றும் கூடுதல் டிஎஸ்பி பதவி வகித்தார்.
கடந்த 2024ம் ஆண்டு இவருக்கு எஸ்பியாக பதவி உயர்வு பெற்றார்.
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு சிறப்பு காவல் படை 12-வது பட்டாலியன் கமாண்டன்ட் பதவியில் பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே கடந்த 13-ம் தேதியன்று அருண் விருப்ப ஓய்வில் செல்ல அரசு அனுமதித்துள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது காவல்துறை அதிகாரிகள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எதற்காக திடீரென எஸ்பி அருண் இந்த முடிவை எடுத்தார் என விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.
இவர் டிஎஸ்பி பதவியில் சேர்ந்த நாள் முதல் நேர்மையாக பணியாற்றி வந்த நிலையில் பல்வேறு சவால்களையும், பிரச்சினைகளையும் துறை ரீதியாகவும், அரசியல் பிரமுகர்கள் மூலமும் சந்திக்க நேர்ந்தது. பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்ட போதெல்லாம் நேர்மையாக பணியாற்ற நினைத்தாலும் ஆளும்கட்சி பிரமுகர்கள் நேரடியாகவோ, தங்களுக்கு வேண்டிய காவல் துறை அதிகாரிகள் மூலமோ தாங்கள் கூறுவதை மட்டுமே செய்ய வேண்டும் என நிர்பந்தம் செய்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். பதவி உயர்விலும் காவல் துறையில் மிகவும் கவுரவமான பதவியாக கருதப்படும் மாவட்ட எஸ்பி பதவியை வழங்காமல் தண்டனை பதவியாக கருதப்படும் பட்டாலியன் பதவியை வழங்கி உயர் அதிகாரிகள் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.
இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும், விருப்ப ஓய்வில் செல்ல விரும்புவதாகவும் ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயராமனிடம் கடிதம் கொடுத்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஏடிஜிபி ஜெயராம் அழைத்து பேசி ராஜினாமா செய்ய வேண்டாம். தேவைப்பட்டால் சில மாதங்கள் மருத்துவ விடுப்பில் சென்று விட்டு மீண்டும் பணிக்கு வரும்படி அறிவுரை கூறியுள்ளார். ஆனால் தனது விருப்ப ஒய்வு முடிவில் எஸ்பி அருண் உறுதியாக இருந்ததால் ராஜினாமா கடிதத்தை டிஜிபிக்கு அனுப்பி வைத்தார். 3 மாதங்கள் வரை அவகாசம் கொடுத்ததும் அருண் தனது முடிவை மாற்றிக்கொள்ளாததால் கடந்த 13ம் தேதியன்று இவரது விருப்ப ஓய்வு ஏற்கப்பட்டது.
தமிழக காவல் துறையில் தற்போது பெரும்பாலான உயர் அதிகாரிகள் முதல் கீழ்மட்ட போலீசார் வரை கடும் மன உளைச்சலில்தான் இருந்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. காரணம் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அதிமுக ஆதரவு அதிகாரிகள் என கூறி பலரை டம்மி பதிவியில் அமர வைத்துவிட்டனர். ஆனால் அதிமுக ஆட்சியில் இருந்துகொண்டே திமுக மேலிடத்துடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் மட்டும் தொடர்ந்து முக்கிய பதவியில்தான் இருந்து வருகின்றனர்.
மாவட்ட அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள், மேலிடத்திற்கு நெருக்கமானவர்கள் எனக் கூறி மணல் கடத்தல், கனிமவளங்கள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கூட தன்னிச்சையாக மாவட்ட எஸ்.பி.க்கள் கைது செய்ய முடியாதபடி அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களின் தலையீடு அதிகமாகி விட்டதாகவும் புலம்பல் அதிகமாக உள்ளது.
இவர்களைவிட டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்களும் வேலையை விட்டுவிட்டால் கூட பரவா இல்லை என்ற மன வேதனையில் இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றனர்.
இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் அமைச்சர்கள், ஆளுங்கட்சி விஐபிகள் மற்றும் உயர் அதிகாரிகளை ஐஸ் வைக்கும் திறமை இல்லாத பல அதிகாரிகள் முக்கிய பதவிகளில் வலம் வருகின்றனர்.
இவர்கள் எந்த ஆட்சிக்கு வந்தாலும் முக்கிய பதவிகளில் தான் இருப்பார்கள்.
ஆனால் உண்மையிலேயே திறமையாக காவல்துறையில் வெறியோடு பணியாற்ற வந்த பலரும் டம்மி போஸ்ட்களில் அமர வைக்கப்படுகின்றனர்.
குறிப்பாக இன்ஸ்பெக்டர்கள் குற்ற பிரிவில் பணியமர்த்தப்படுகின்றனர். இவர்களுக்கு வாகனங்கள் கிடையாது. அப்படியே கொடுத்தாலும் காயலான் கடைக்குச் செல்லும் வண்டிகளை கொடுக்கிறார்கள். அப்படி வண்டி கொடுத்தாலும் அதற்கு டிரைவர் கொடுப்பதில்லை. இதெல்லாம் இருந்தாலும் குற்றவாளியை பிடிக்கச் செல்ல காவலர்கள் கூடுதலாக கிடையாது. இப்படி இருக்கையில் எப்படி குற்றவாளிகளை நாங்கள் கைது செய்வது எப்படி செல்வது வாங்குகிற சம்பளம் செலவுக்கு சரியா போகிறது என்று புலம்புகின்றனர். இதனால் குற்றப்பிரிவில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் கடுமையான மழை உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இவர்களின் மன உளைச்சலை போக்க டிஜிபி கூடுதல் டிஜிபிக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரும்புகின்றனர்.