ஆந்திராவில் திருட வந்த வீட்டில் மூன்று நாட்களாக தங்கி மது குடித்து போதையில் திருடன் உறங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம், விஜயநகரம் மாவட்டம் பொப்பிலியை அடுத்த கொல்லப்பள்ளிஅம்பேத்கர் காலனியைச் சேர்ந்த விவசாயி சீனிவாச ராவ். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களது மகன் விசாகப்பட்டினத்தில் உள்ள ஐஏஎஸ் அகாடமியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். சீனிவாசராவ் தனது மனைவியுடன் சேர்ந்து கிராமத்தில் உள்ள நிலத்திற்குச் சென்று விவசாயம் பார்ப்பது வழக்கம். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தம்பதி விவசாயம் செய்வதற்காக தங்கள் சொந்த கிராமத்திற்குச் சென்னர்.
இவர்களது வீடு பூட்டப்பட்டிருப்பதைக் கண்ட திருடன், கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்தார். அங்கு பீரோவில் இருந்த வெள்ளிப் பொருட்களைத் திருடி கடையில் சென்று விற்று அந்த பணத்தில் மது பாட்டிலை வாங்கிக் கொண்டு திருடிய வீட்டிலேயே வந்து தங்கியுள்ளான்.மூன்று நாட்களாக பகலில் கடைக்கு செல்வதும், இரவில் திருடிய வீட்டிற்கு வந்து மது குடித்து குறட்டை விட்டுள்ளார்.
பகலில் பூட்டிக் கிடக்கும் வீட்டில் இரவில் விளக்கு எரிவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து சீனிவாச ராவிற்கு தகவல் தெரிவித்தனர். அத்துடன் அந்த வீட்டிற்குச் சென்று பார்த்த போது திருடன் ஒருவன் போதையில் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவனைப் பிடித்து அடித்து உதைத்த போது, தனது பெயர் கிருஷ்ணா என்றும் பிடரி கிராமத்தைச் சேர்ந்தவன் என்றும் கூறினார்.
அத்துடன் சீனிவாச ராவ் வீட்டில் திருடிய வெள்ளிப் பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக விற்று மது குடித்ததாகவும் மூன்று நாட்களாக அந்த வீட்டில் தங்கியிருந்து மது குடித்து வந்ததாகவும் கிருஷ்ணா கூறினார். இதையடுத்து அவரை தர்ம அடி கொடுத்து போலீஸாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். பூட்டிய வீடுகளை நோட்டம் பார்த்து திருடுவது கிருஷ்ணாவிற்கு கைவந்த கலை என்று கூறிய போலீஸார், அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதாக கூறினர். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடிய வீட்டில் மூன்று நாட்கள் மது போதையில் திருடன் தங்கியிருந்த சம்பவம் ஆந்திரா முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.