பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் கல்லூரிக்குள் 22 வயது மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம், பாலசோர் நகரில் உள்ள கல்லூரியில் படிக்கும் 22 வயது மாணவிக்கு பேராசிரியர் சமீர்குமார் சாஹு என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கல்லூரி புகார் குழுவிடம் மாணவி, ஜூலை 1-ம் தேதி புகார் அளித்தார். அதில், பேராசிரியர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாகவும்,, மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுக்களை பேராசிரியர் சமீர்குமார் சாஹு மறுத்தார்.
மாணவி அளித்த புகாரின் பேரில், ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்தது. ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கடந்த 12-ம் தேதி மாணவர்களுடன் இணைந்து மாணவி போராட்டம் நடத்தினார்.
அப்போது திடீரென முதல்வர் அலுவலகத்தின் அருகே மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றி மாணவி தீக்குளித்தார். இதனால் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் மாணவி சிகிச்சை பெற்று வந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஒடிசா காவல்துறை தானாக முன்வந்து இவ்வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தீக்குளித்த மாணவி உயிரிழந்தார். இதனிடையே புகாரை வாபஸ் பெறுமாறு கல்லூரியின் முதல்வரும், புகார்கள் குழு உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்ததாகவும், அப்படி வாபஸ் வாங்காவிட்டால் வழக்குப் போடுவோம் என்று மிரட்டினார்கள் என்று மாணவியின் தந்தை குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து கல்லூரியின் துறைத்தலைவர் மற்றும் முதல்வர் திலீப் கோஷ் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மாணவியின் மறைவுக்கு ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் மாணவி உயிரிழப்பிற்கு காரணமான குற்றவாளிகள் அனைவரும் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.