ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழை மற்றும் தொடரும் நிலச்சரிவுகளால் அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.
தெற்கு காஷ்மீரின் இமயமலை பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் பனி உறைந்து சிவலிங்க வடிவத்தில் காணப்படும். இயற்கையாக உருவாகும் இந்த பனி லிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். கடந்த ஆண்டு 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் யாத்திரையில் பங்கேற்றனர்.
இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ம் தேதி தொடங்கியது. 38 நாட்கள் நடைபெறும் யாத்திரைக்காக இதுவரை நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் யாத்திரைக்காக ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். இந்த யாத்திரை ஆகஸ்ட் 9-ம் தேதி நிறைவடைகிறது.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பஹல்காம் மற்றும் பால்தால் அடிப்படை முகாம்களில் இருந்து அமர்நாத் செல்பவர்களின் யாத்திரை இன்று நிறுத்தப்பட்டுள்ளது.ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகளில் மேலும் கனமழை பெய்யும் என்று வானிலை எச்சரிக்கை எச்சரித்துள்ளது. இந்த ஆண்டு ஜம்முவிலிருந்து பயணம் நிறுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்
"கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பக்தர்கள் பயணிக்க தேவையான பாதைகளை சரிசெய்ய வேண்டும். எனவே, இரண்டு அடிப்படை முகாம்களில் இருந்து பயணம் நிறுத்தப்பட்டுள்ளது," என்று காஷ்மீர் பிரிவு ஆணையர் விஜய் குமார் பிதுரி கூறினார். நாளை முதல் பயணம் மீண்டும் தொடங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.