இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ்ந்த சாய்னா நேவால் தனது காதல் கணவர் பருபுல்லி காஷ்யப்பை பிரிவதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் (35), பேட்மிண்டனில் உலக தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றதோடு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம், உலக சாம்பியன்ஷிப்பில் 1 வெள்ளி, 1 வெண்கலம் என பல்வேறு பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ந்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சாய்னா அறிவித்திருந்தார்.
இதனிடையே, சாய்னா நேவாலுக்கும் முன்னாள் இந்திய பேட்மிண்டன் வீரரான பருபுல்லி கஷ்யப் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகள் நீண்ட நாள் காதலுக்குப் பிறகு திருமணம் செய்ததாகவும், சமூக வலைதளங்களில் அடிக்கடி ஒன்றாக வெளியிடும் புகைப்படங்கள் வழியாக மிக நெருங்கிய உறவாகவே தெரிந்தனர். இவர்கள் இருவரும் ஐதாராபாத்தில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், தனது 7ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு முடிவுக்கு வந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் மூலம் சாய்னா நேவால் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்க முடிவு செய்து பிரிவதாக அறிவித்துள்ளார். கஷ்யப்பை பிரிவதற்கான காரணம் குறித்து சாய்னா எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த அறிவிப்பால் சாய்னாவின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.