அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ விசாரணை இன்று தொடங்கும் நிலையில் மானாமதுரைக்கு புதிய டிஎஸ்பி உட்பட தமிழகம் முழுவதும் 40 டிஎஸ்பிக்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் மடப்புரம் கோயிலின் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் அஜித்குமார். இவர் மீது பேராசிரியர் நிகிதா என்பவர் கொடுத்த நகைத்திருட்டு புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். சந்தேக வழக்கில் கைது செய்யப்பட்ட அஜித்குமார் போலீஸாரின் விசாரணையின் போது மரணமடைந்தார். அவர் தனிப்படை காவலர்களால் சரமாரியாக தாக்கப்படும் வீடியோ வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் 5 போலீஸார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை டிஎஸ்பியாக இருந்த சண்முகசுந்தரத்தை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் மானாமதுரை டிஎஸ்பியாக காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனையடுத்து, விசாரணையை சிபிஐக்கு மாற்றிய உயர்நீதிமன்றம், அடுத்த மாதம் 20-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, திருப்புவனம் போலீஸாரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களைப் பெற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணையைத் தொடங்க உள்ளனர். சிபிஐ விசாரணை தொடங்க உள்ள நிலையில், மானாமதுரைக்கு புதிய டிஎஸ்பி நியமிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மானாமதுரை டிஎஸ்பி உட்பட தமிழகம் முழுவதும் 40 டிஎஸ்பிக்கள் பணி மாறுதல் செய்யப்பட்டு புதிய இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.