கர்நாடகாவில் காதலிக்க மறுத்த பெண்ணைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்த வாலிபர், அந்த பெண்ணின் பிணத்திற்கு தாலி கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் கேதனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பூர்ணிமா(36). இவர் அதே ஊரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த ஊரைச் சேர்ந்த அபிஷேக்(40) என்ற விவசாயி, பூர்ணிமாவை ஒரு தலையாக காதலித்து வந்தார். பூர்ணிமாவிற்கு திருமணத்திற்காக அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர்.
அந்த நிலையில், பள்ளிக்குச் சென்ற பூர்ணிமாவை பின் தொடர்ந்த அபிஷேக், தனது காதலைச் சொல்லியுள்ளார். ஆனால், அவரது காதலை பூர்ணிமா ஏற்கவில்லை. ஆனாலும் தன்னைக் காதலிக்குமாறு பூர்ணிமாவிடம் அபிஷேக் வற்புறுத்தியுள்ளார். நண்பராக வேண்டுமானால் இருக்கலாம், காதலிக்க முடியாது என்று கறாராக பூர்ணிமா கூறியுள்ளார். இதனை அபிஷேக்கும் ஏற்றுள்ளார். இதன் பின் அவர்கள் நட்புடன் பழகியுள்ளனர்.
ஆனால், மீண்டும் தனது காதலை அபிஷேக் கூறியுள்ளார். இதனால் தனது பெற்றோரிடம் பூர்ணிமா, அபிஷேக் தொல்லை கொடுப்பது குறித்து கூறியுள்ளார். இதனால் அவர்கள் அபிஷேக்கிடம், என் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்தாகி விட்டது. எனவே, அவரை தொல்லை கொடுக்காதே என்று கூறி எச்சரித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக், பூர்ணிமாவை கொலை செய்ய முடிவு செய்தார். அதனை மறைத்துக் கொண்டு கடைசியாக சந்திக்க வேண்டும் என்று பூர்ணிமாவை அழைத்துள்ளார். இதனை நம்பி தனது வீட்டிற்கு அபிஷேக்கை பூர்ணிமா வரச்சொல்லியுள்ளார். அவர் வீட்டு வாசலில் வைத்து பூர்ணிமாவை அபிஷேக் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.
இதன் பின் அவரது உடலை வீட்டிற்குள் கொண்டு சென்று அந்த உடலுக்கு தாலி கட்டியுள்ளார். அந்த சடலத்துடன் போட்டோ எடுத்து அதனை தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக அபிஷேக் வைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.அந்த வழியாகச் சென்றவர்கள் வீட்டு வாசலில் இருந்த ரத்தத்தைப் பார்த்து வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு பூர்ணிமா கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்குச் சென்று பூர்ணிமா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பூர்ணிமாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீஸார், அபிஷேக்கை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.