ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறக்கப்படுகிறது.
கேரளா மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.
அதன்படி ஆடி மாத பூஜைக்காக கோயில் நடை இன்று (ஜூலை 16) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார்.
நடை திறப்பை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோயில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் மட்டும் நடைபெறும். நாளை (ஜூலை 17) முதல் 21 -ம் தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும் .
மேலும் 21-ம் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.