மதுரைகோட்ட ரயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதின் காரணமாக தென் மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை கோட்ட ரயில்வேக்கு உள்பட பகுதிகளில் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதன் காரணமாக தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி-சரளப்பள்ளி வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண். 07229) வருகிற 18-ம் தேதி மற்றும் 25-ம் தேதிகளில் விருதுநகரில இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்கிறது. இந்த ரயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் காரைக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கன்னியாகுமரி-ஹவுரா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.12666) வருகிற 19-ம் தேதி மற்றும் 26-ம் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். இந்த ரயில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். அதேபோல, கோவை-நாகர்கோவில் ரயில் (வண்டி எண்.16322) நாளை முதல் வருகிற 31-ம் தேதி வரை திண்டுக்கல் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.
மறுமார்க்கத்தில் நாகர்கோவில்-கோவை ரயில் (வண்டி எண்.16321) வருகிற 26 மற்றும் 27-ம் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக கோவை செல்லும். இந்த ரயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.16352) வருகிற 20-ம் தேதி, 24-ம் தேதி மற்றும் 27-ம் தேதிகளில் விருதுநகரில் இருந்து மாற்றுப்பாதை வழியாக திருச்சி செல்லும். நாகர்கோவில்-கச்சிகுடா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.16354) வருகிற 26-ம் தேதி விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை வழியாக திருச்சி செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.