மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதன் காரணமாக. ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 11 காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில், காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக, அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனையடுத்து, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. இதனால் மேட்டூர் அணை நேற்று முலை முழுமையாக நிரம்பி 120 அடியை எட்டியது.
மேட்டூர் அணையின் 92 ஆண்டுகால வரலாற்றில் 44-வது ஆண்டாக முழு கொள்ளவான 120 அடியை எட்டி உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 30 மற்றும் ஆகஸ்ட் 12-ம் தேதி, டிசம்பர் 31-ம் தேதி என மூன்று முறை மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. நடப்பாண்டில் முதல் முறையாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளது.
மேட்டூர் அணை நிரம்பியதைத் தொடர்ந்து அணையின் இடது கரையில் 16 கண் பாலம் அருகே நீர்வளத்துறை அதிகாரிகள் சிறப்பு பூஜைகள் செய்து காவிரி அன்னையை வழிபட்டனர். இதனையடுத்து, எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியான 16 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தற்போது 4 மதகுகளில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் 12 மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 32 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 11 காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.