தான்சானியாவில் பயணிகள் பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி தீப்பிடித்ததில் 40 பயணிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஆப்ரிக்கா நாடான தான்சானியாவில் கிளிமஞ்சாரோ மோனி டங்கா சாலையில் உள்ள சபாசாபா பகுதியில் இரண்டு பயணிகள் பேருந்துகள் நேற்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாயின. இதனால் இரண்டு பேருந்துகளும் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதனால் பயணிகள் வெளியே வர முடியாமல் அலறித் துடித்தனர்.. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
ஆனாலும் இரண்டு பேருந்துகளில் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30-க்கும மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றவர்களின் பேருந்தின் டயர் பஞ்சரானதால் அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.