அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதாவைத்தான் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று அவரது முன்னாள் கணவரும், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவருமான திருமாறன் கூறினார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எனக்கு 21 ஆண்டுகளுக்கு முன்பே நிகிதா குடும்பத்தை தெரியும். அவர் என்னை திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் பாலும், பழமும் சாப்பிடுவதற்கு முன்பே ஓடிவிட்டார். கடந்த 2004 ஆகஸ்ட் 29-ம் தேதிதான் எங்களது திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் தான் நடத்தி வைத்தார்.
நிகிதாவின் குடும்பத்தினரின் திருமண மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். திருமணங்களை செய்துவிட்டு அவர்களை காவல்துறை, நீதிமன்றம் என அலையவிட்டு அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம் பறித்துவிட்டு விவகாரத்து தருவதுதான் இந்த கும்பலின் வேலை. என்னிடம் அவரது தந்தை ரூ.10 லட்சம் பெற்றுக்கொண்டுதான் விவகாரத்து கொடுத்தனர். திருமண மோசடி மட்டுமின்றி வேலை வாங்கி தருவதாகவும் பல்வேறு மோசடிகளை செய்துள்ளனர்.
நிதிதா மூன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்து ஏமாற்றியுள்ளார். திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் ஓடிப்போய் விடுவார். நிகிதாவின் தந்தை ஜெயபெருமாள் துணை ஆட்சியராக இருந்தவர். அவர்களுக்கு காவல்துறையின் முழு ஆதரவு இருக்கிறது.
நிகிதா தனது நகை காணாமல் போனதாக சொல்வது எல்லாம் பொய்யாகத்தான் இருக்கும். கோயிலில் காவலாளி அஜித்குமாருடன் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கும்.. அதற்காக அவர் மீது நகை திருட்டு பழியைப் போட்டிருப்பார்.. நிகிதா நகையை தொலைக்கக் கூடியவரும் அல்ல. அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதாவைத்தான் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.