ரோமில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 காவல்துறை அதிகாரிகள் உள்பட 45 பேர் படுகாயமடைந்தனர்.
இத்தாலி தலைநகர் ரோமின் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக மாறியது. தகவலறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் 12 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 6 தீயணைப்பு வீரர்கள் உள்பட 45 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அப்போது பெட்ரோல் நிலையத்தில் உள்ள பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) விநியோகஸ்தர் பகுதியில் கசிவு ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இந்த பயங்கர சத்தம் தலைநகர் முழுவதும் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த விபத்தில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.