நடக்கக்கூடாது நடந்துருச்சு என்று அஜித்குமாரின் தாயாரிடம் தொலைபேசி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டுள்ளார்
சிவகங்கை அஜித்குமார் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், கடந்த 28-6 2025 அன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்பவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
விசாரணையின் போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்பதை அறிந்ததும் நான் மிகவும் வேதனையடைந்தேன். இது யாராலும் நியாயப்படுத்தப்பட முடியாத, காரணம் சொல்லித் தப்பிக்க முடியாத செயல். இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்ட 6 காவலர்கள் உடனடியாகச் சம்பவம் நடந்த அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இத்தகைய வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகளின்படி, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. நேற்றைய தினம், 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கும் மாற்றப்பட்டது. இன்று சம்பந்தப்பட்ட மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். துணைக் கண்காணிப்பளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இப்படி சட்டபூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
துயர மரணத்தை அடைந்துள்ள அஜித்குமாரின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு நான் பேசினேன். நடைபெற்ற துயரச் சம்பவத்திற்கு எனது வருத்தத்தை அவர்களிடம் தெரிவித்தேன். நியாயமான, ஒளிவுமறைவற்ற, எவ்வித பாரபட்சமுமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அஜித்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளேன்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இவ்வழக்கில் சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடரலாம் எனவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவத்தில் காவல் துறையைச் சேர்ந்த ஐவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றிடுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும்.
காவல்துறையினர் தங்களது விசாரணையின்போது மனித உரிமையைக் காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை நான் பலமுறை வலியுறுத்தி இருக்கிறேன். இதுபோன்ற மீறல் சம்பவங்களை நான் எப்போதும் ஏற்றுக்கொள்வது இல்லை. திருப்புவனத்தில் சில காவலர்கள் செய்த செயல், மன்னிக்க முடியாதது. இனி இதுபோன்ற செயல் எக்காலத்திலும் எங்கும் யாராலும் நடந்துவிடக் கூடாது என்பதை எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன்.
தங்களுடைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்திடும் என நம்பி காவல்துறையை நாடி வரும் பொதுமக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றிடும் வகையில் காவல்துறை எப்போதும் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் தொலைபேசி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டுள்ளார். அமைச்சர் பெரியகருப்பன் அஜித்குமாரின் வீட்டுக்குச் சென்று அஜித்குமாரின் தாய் மாலதிக்கு ஆறுதல் கூறினார். அத்துடன் அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேச போன் போட்டுக் கொடுத்தார்.
அப்போது மாலதியிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வணக்கம்மா… ரொம்ப ரொம்ப சாரிம்மா… தைரியமா இருங்க. ஆக்ஷன் எடுக்க சொல்லியிருக்கேன். சீரியஸாக எடுக்க சொல்லியிருக்கேன். என்ன பண்ணனுமோ உங்களுக்கு பண்ணி கொடுக்க சொல்றேன். மந்திரி பாத்துப்பாரு… தைரியமா இருங்கம்மா. நடக்கக்கூடாது நடந்துருச்சு”என்று ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து அஜித்குமாரின் சகோதரர் நவீன் குமாரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது, “தம்பி… நடக்கக்கூடாது நடந்துருச்சு… தைரியமா இருங்க. ஆக்ஷன் எடுக்க சொல்லிருக்கேன். என்ன பண்ணனுமோ பண்ண சொல்லிருக்கேன்” என்றார். அதற்கு , “இல்லைசார் …விசாரணைனு கூட்டிட்டு போய்ட்டு இந்த மாதிரிலாம் பண்ணிட்டாங்க” என்று நவீன் சொல்லவும், " உடனே ஆக்சன் எடுக்க சொல்லியிருக்கோம். அரஸ்ட் பண்ணியாச்சு எல்லாரையும். நீங்க தைரியமா இருங்க. உங்களுக்கு என்ன பண்ணி கொடுக்கனுமோ பண்ணி கொடுக்க சொல்றேன்" என்று மு.க.ஸ்டாலின் கூறினார். அப்போது, " இல்லை சார், பையனுக்கு வயசு 29தான். எங்க அப்பா சின்னா வயசுலயே இறந்துட்டாங்க… கஷ்டப்பட்டு வளர்த்த பிள்ளை சார் அவன் என்று நவீன் குமார் கூறவும்," இதை யாராலும் ஒத்துகொள்ள முடியாது. என்ன தண்டனை வாங்கிக் கொடுக்க முடியுமோ. பெற்றுத் தருகிறேன்” என்று மு.க.ஸ்டாலின் அவருக்கு உறுதியளித்தார்.