விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கோமதி(38) என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 26வது வார்டு கவுன்சிலராக கோமதி செயல்பட்டு வந்தார்.
கடந்த சில நாட்களாக கோமதிக்கும், அவரது கணவருக்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளது. தன்னை விட வயது குறைவான ஒருவருடன் தகாத உறவில் கோமதி இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது கணவர் ஸ்டீபன்ராஜ் கண்டித்ததால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆனாலும், பலமுறை எச்சரித்தும் கோமதி தகாத தொடர்பை கைவிட மறுத்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு கோமதியும் அவரது காதலரும் சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த ஸ்டீபன்ராஜ் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைக் கண்ட கோமதியின் காதலன் அங்கிருந்து தப்பியோடி உள்ளார். இந்த நிலையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோமதியை ஸ்டீபன்ராஜ் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கோமதி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து திருநின்றவூர் காவல் நிலையத்தில் ஸ்டீபன்ராஜ் கத்தியுடன் சரணடைந்தார். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியை பறிமுதல் செய்த போலீஸார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கோமதிக்கு நான்கு மகன்கள் இருப்பது தெரிய வந்தது. திருமணத்தை மீறிய உறவில் கோமதி இருந்ததாக ஸ்டீபன்ராஜ் கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலித்து திருமணம் செய்த மனைவியை கணவனே வெட்டிக்கொலை செய்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.