காலாவதியான வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படாது என்ற உத்தரவை டெல்லி அரசு தற்காலிகமாக கைவிட்டுள்ளது.
காற்று மாசுவை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, காற்று மாசு அதிகரிப்பதற்கு பழைய வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை முக்கிய காரணமாக உள்ளது.
இதன் காரணமாக டெல்லியில் 10 ஆண்டுகளைக் கடந்த டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகளைக் கடந்த பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை முதலில் தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்தது. இதனை உச்ச நீதிமன்றமும் அதை உறுதி செய்தது. பின்னர், மத்திய அரசும் அதற்கான புதிய சட்டங்களைப் பிறப்பித்தது.
அதேபோல், வெளிமாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் நுழையும் இதுபோன்ற வாகனங்களுக்கு முதல் முறையாக அபராதம் விதிக்கப்படுகிறது. மீண்டும் அதே தவறை செய்தால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இதனிடையே காலாவதியான வாகனங்களுக்கு டெல்லியில் உள்ள பங்க்குகளில் பெட்ரோல், டீசல் வழங்குவதை ஜூலை முதல் நிறுத்துமாறு கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசின் காற்று தர மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
டெல்லியில் மொத்தம் 62 லட்சம் காலாதியான வாகனங்கள் உள்ள நிலையில், அதில் 41 லட்சம் இருசக்கர வாகனங்களும், 18 லட்சம் 4 சக்கர வாகனங்களும் உள்ளன. இந்த வாகனங்களுக்கு ஜூலை 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் வழங்கப்பட்டது என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தடையை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்து வந்தனர்.
இந்நிலையில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க மறுக்கும் உத்தரவை டெல்லி அரசு ரத்து செய்துள்ளது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக இந்த முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.