பிரவீன் சக்ரவர்த்தி தவெக தலைவர் விஜய்யை சந்தித்தது குறித்து எனக்குத் தெரியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தமிழ்நாடு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்ரவர்த்தி தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். ஏற்கெனவே திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ஐவர் குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. அக்குழுவும் முதற்கட்ட பேச்சுவார்த்தையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நடத்தியுள்ளது.
அத்துடன் எத்தனை தொகுதிகள் வேண்டும் என்ற கடிதத்தையும் அவரிடம் கொடுத்துள்ளது. இந்த நிலையில், விஜய்யிடம் பிரவீன் சக்ரவர்த்தி பேசியது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் திமுகவுடன், ஒருபுறம் தவெகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (டிச.6) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய்- பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு, "பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை சந்தித்தது குறித்து எனக்குத் தெரியாது. தொகுதி பங்கீடு குறித்து திமுகவோடு பேச நாங்கள் ஐவர் குழு அமைத்திருக்கிறோம்.
அவர்கள் திமுகவோடு பேச்சுவார்த்தை நடத்துவது மட்டும் தான் எங்களுக்கு தெரியும். விஜய்யை சந்திக்க பிரவீன் சக்ரவர்த்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை. இதைப் பற்றி நாங்கள் பேசவும் இல்லை. இந்தியா கூட்டணி வலிமையானது, இதை உடைக்கவோ, சிதைக்கவோ யாராலும் முடியாது" என்று செல்வப்பெருந்தகை பதிலளித்துள்ளார்.


