மதசார்பின்மை வேடமிட்டு இந்து மதத்தை மட்டும் குறிவைத்து தாக்கும், தி.மு.க., அரசின் முயற்சி, முருகனின் ஆசியுடன் முறியடிக்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " திருப்பரங்குன்றம் மலை உச்சியில், கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்ட தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, திமுக அரசு மேல்முறையீடு செய்திருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
முருக பெருமான் அருள்பாலிக்கும் கந்தர் மலையை, சிக்கந்தர் மலையாக சிலர் மாற்ற முயற்சித்தபோது வேடிக்கை பார்த்து விட்டு, அறுபடை வீட்டை காக்க, அலைகடலென திரண்டு ஆர்ப்பரித்தபோது, ஏவல் துறையை வைத்து திமுக அரசு அராஜகம் செய்தது.
தற்போது ஒருபடி மேலே சென்று, கார்த்திகேயனின் மலையில், கார்த்திகை தீபம் ஏற்றக்கூடாது என முறையிட்டு, தனது இந்து மத வெறுப்பை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தி உள்ளது. ஒன்று மட்டும் நிச்சயம், மதசார்பின்மை வேடமிட்டு இந்து மதத்தை மட்டும் குறிவைத்து தாக்கும், தி.மு.க., அரசின் முயற்சி, முருகனின் ஆசியுடன் முறியடிக்கப்படும். குன்றம் குமரனுக்கே என்பது ஆணித்தரமாக, மீண்டும் உணர்த்தப்படும். மக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் திமுக அரசு தூக்கி எறியப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




