தமிழக முதலமைச்சரின் பிரித்தாலும் சூழ்ச்சியினாலேயே திருப்பரங்குன்றத்தில் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "வீடுகளில் தீபம் ஏற்றுவது போலவே கார்த்திகை நாளன்று கோயில்களிலும் தீபம் ஏற்றப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்றுவதில் யாருக்கு என்ன பிரச்னை இருக்கிறது? முதலில் அந்த மலைக்கு பிரச்சனை செய்தார்கள். ஆனால் குன்றம் குமரனுக்கு என தீர்ப்பு வந்தது .
முதலமைச்சரின் காவல்துறை எந்த வேலையும் செய்யவில்லை. கோயில்களுக்கு எதிரான வேலை என்றால் முதல் ஆளாக வந்து விடுகிறார்கள். நேற்று திருப்பரங்குன்றத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அறநிலையத்துறை சார்பில் இந்த தீர்ப்பை எதிர்த்துமேல் முறையீடு செய்துள்ளார்கள். பிரச்சனையை உருவாக்க வேண்டும். கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த விவகாரத்தில் திமு.க அரசு செயல்படுகிறது. வாக்கு வங்கியை குறிவைத்து இது போன்ற நடவடிக்கையை திமுக அரசு மேற்கொள்கிறது. திமுக அரசு ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றினால் கலவரம் வரும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் பேசுகிறார். அதற்கான வாய்ப்பே இல்லை.தீபம் ஏற்றுவதற்கு இஸ்லாமியர்கள் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அங்கு இரண்டு மதத்தினரும் ஒன்றாகவே இருக்கின்றனர்.
முதலமைச்சரின் பிரித்தாலும் சூழ்ச்சியினாலேயே தற்போது இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதானத்தை வேரறுப்போம் என்று கூறியுள்ளார். அதனை முருகன் பார்த்துக் கொள்வார். இன்று 3 மணி வரை நேரம் இருக்கிறது. நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பரணி தீபத்தை மலை மீது ஏற்றுவோம். இந்த தீர்ப்புக்கு அறநிலையத்துறை தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
திமுக அரசு தோல்வி பயத்தில் நடுநடுங்கி போய் உள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு அவசியமே இல்லை. அவ்வாறு பிறப்பித்தாலும் 3 பேர் வரை செல்வதற்கு அனுமதி உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு சென்று வந்தது தெரியும். ஆனால் எதற்காக சென்று வந்தார் என்பது எனக்கு தெரியாது. திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும். அதனை வரவேற்கும் கட்சிகள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்". என்றார்.




