மக்களின் வழிபாட்டு உரிமையை திமுக அரசு தடுத்துக் கொண்டிருக்கிறது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
மதுரை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரம் நாடாளுமன்றத்தில் இன்று (டிசம்பர் 5) ஒலித்தது. திமுக மக்களவைக்குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசுகையில், "திருப்பரங்குன்றம் விவகாரம் மிகுந்த கவலையளிக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர். தனி நீதிபதி தீர்ப்பால் திருப்பரங்குன்றத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது" என்றார். அவரின் இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கண்டனம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறுகையில், “ திருப்பரங்குன்றத்தில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் கூட திமுக அரசு மக்களை வழிபடுவதை தடுத்திருக்கிறது. உயர் நீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு அரசும், தமிழக காவல் துறையும் மதிக்காமல் அங்கு போக இருந்த மக்களைத் தடுத்து நிறுத்தி இருக்கின்றனர்.
வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்ட பிறகு மாண்புமிகு மதுரை உயர்நீதிமன்ற அமர்வு 50 சிஐஎஸ்எப் வீரர்கள் உதவியுடன் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது. ஆனால், அங்கு தீபம் ஏற்ற விடாமல் தடுத்து, அங்கு செல்பவர்களை எல்லாம் கைது செய்து திமுக அரசும், அங்கிருக்கும் காவல்துறையும் அராஜக போக்கில் ஈடுபட்டுள்ளது.
மக்களின் வழிபாட்டு உரிமையைத் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வழிபாட்டு உரிமையை தடுப்பதற்கு திமுக அரசு வாக்கு வங்கி அரசியலுக்காக குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை தாஜா செய்ய வேண்டும் என்ற நோக்கோடு அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். திமுக அரசால் அங்கு சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்து இருக்கிறது. திமுகவின் காவல்துறை சட்டம் ஒழுங்கை கையில் எடுத்திருக்கிறது. அங்கிருக்கும் காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதை விட்டுவிட்டு வழிபாட்டுக்கு செல்லுகின்ற மக்கள் மேல் மிகப்பெரிய தாக்குதலை தொடுத்திருக்கிறார்கள்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள 25வது ஷரத்து ஒவ்வொருவரும் சுதந்திரமாக சென்று வழிபட அனுமதி கொடுத்திருக்கிறது. அந்த அடிப்படை உரிமையை தடுக்கும் அரசாக திமுக அரசு இருந்து கொண்டிருக்கிறது. இது மாநிலத்தில் பேச வேண்டிய விஷயம். அதை விட்டு விட்டு இங்கு வந்து நாடாளுமன்றத்தில் இடையூறு கொடுக்கின்றனர்" என்றார்.


