சென்னை விமான நிலையத்தில் இன்று(டிசம்பர் 6) இண்டிகோவின் 48 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விமானிகளின் பணி நேர வரம்பு (எப்டிடிஎல்) குறித்து கடந்த மாதம் திருத்தப்பட்ட விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதனால் இந்தியா முழுவதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் விமானிகள் மற்றும் விமான பொறியாளர்கள், விமான இயக்க பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த நான்கு நாட்களாக விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று மதியத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டு இருந்தன. இதனால் பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளாகினர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மீண்டும் சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் இயங்கத் தொடங்கின. முதல் விமானம் அதிகாலை 3 மணிக்கு சென்னையில் இருந்து புணேவுக்கு புறப்பட்டுச் சென்றது. அதனைத் தொடர்ந்து அகமதாபாத், அந்தமான், கவுகாத்தி, கொல்கத்தா, புவனேஸ்வர், கோவை ஜெய்ப்பூர், கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு 10 விமானங்கள் இயங்கத் தொடங்கின.
இதற்கிடையே இன்று காலையில் இருந்து இரவு வரையில் சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, புனே, விசாகப்பட்டினம், ஹைதராபாத், கொச்சி, பெங்களூரு, கோவை, புவனேஸ்வர், பாட்னா உள்ளிட்ட 28 இடங்களுக்கு இயக்கப்படவிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன என்று நிறுவன நிர்வாகம் திடீரென அறிவித்துள்ளது.
இதேபோல் இன்று அதிகாலையில் இருந்து இரவு வரை டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, திருவனந்தபுரம், கொச்சி, அந்தமான், கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சென்னை வரவிருந்த 20 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் இண்டிகோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் இன்று ஒரே நாளில் 28 புறப்பாடு விமானங்களும், 20 வருகை விமானங்களும் என மொத்தம் 48 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களின சேவை ரத்தாகியுள்ளன. இன்று எந்தெந்த விமானங்கள் ரத்து என்பது குறித்து இண்டிகோ விமான நிறுவனம் தரப்பில் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

