தொடர் வெற்றியால் எங்களுக்கு அகங்காரம் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அதற்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " இன்று நடக்கும் நாடாளுமன்ற கூட்டம் இந்தியா வளர்ச்சிக்கு உதவும். இந்தியா வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பிஹாரில் ஜனநாயக குரல் தேர்தல் மூலம் எதிரொலித்தது. இந்த தோல்வியை மனதில் கொண்டு எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது.
பிஹார் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் இருந்து மீண்டு வந்து, தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். தொடர் வெற்றியால் எங்களுக்கு அகங்காரம் இல்லை. இந்தியா எப்போது ஜனநாயகத்தை காக்கும் நாடாக விளங்குகிறது.
நாடாளுமன்றத்தை கூச்சல், குழப்பம் ஏற்படுத்தும் இடமாக பயன்படுத்தக் கூடாது. குளிர்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும். குறிப்பாக, மக்கள் பிரச்னை குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும். இளம் எம்.பி.க்கள், முதல் முறை எம்.பி.க்களை அதிக நேரம் பேச முன்னுரிமை அளிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் தங்கள் அமளியை அவைக்கு வெளியே வைத்துக் கொள்ளட்டும். அவைக்கு உள்ளே அமளியில் ஈடுபடக் கூடாது" என்றார்.




