தன்னை கைது செய்யப்போவதாக மிரட்டியவர்கள் மீது டெல்லி போலீஸில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்மும் எம்.பி புகார் அளித்துள்ளார்.
இந்தியா முழுவதும் ஆன்லைன் மூலம் நடைபெறும் டிஜிட்டல் மோசடிகளில் ஐ.டி ஊழியர்கள், அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொலைபேசியில் கைது செய்வோம் என்று மிரட்டி பணம் பறிக்கும் டிஜிட்டல் அரசு கும்பல், தற்போது அதிமுக எம்.பி ஒருவரை டார்க்கெட் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பியுமான சி.வி.சண்முகம் இது தொடர்பாக டெல்லி நாடாளுமன்ற காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில்,"நான் காலையில் நாடாளுமன்றத்திற்குச் செல்லும் போது போன் அழைப்பு வந்தது. அழைப்பாளர் தன்னை மும்பையைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி என்று ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
என்னை ஒரு தீவிரவாதி என்றார். பின்னர் உடனடியாக என்னைக் கைது செய்யப் போவதாக மிரட்டினார். பின்னர் அந்த அழைப்பு மூத்த போலீஸ் அதிகாரி என்று கூறிக் கொள்ளும் மற்றொரு நபருக்கு மாற்றப்பட்டது. அவரும் என்னை மிரட்டினார். என் மீது 17 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக பொய்யாகக் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த மாதிரியான சம்பவம் நடக்கும்போது, சாதாரண மக்கள் அதிகம் பாதிக்கப்படலாம்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




