அமெரிக்காவை தாக்கிய அதி தீவிர பனிப்புயலால் 5.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை குளிர்காலமாகும. இக்காலத்தில் பனிப்புயல் தாக்குவதுடன் வெப்பநிலை மைனஸ் 10 முதல் மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் வரை செல்லும். இந்த பனிப்புயலால் நியூயார்க், மாசசூசெட்ஸ், பென்சில்வேனியா, மைனே போன்ற வட கிழக்கு மாகாணங்கள் அதிகம் பாதிக்கப்படும்.
இந்த நிலையில், அமெரிக்காவில் கடந்த வாரம் இரண்டு பனிப்புயல்கள் தாக்கின. இதனால் 33 சதவீத பரப்பை பனி மூடியுள்ளது. இந்த நிலையில், புதிய பனிப்புயல் நேற்று உருவானது. அது அதிதீவிர பனிப்புயலாக உருவாகியுள்ளது. காற்றில் அழுத்தம் மில்லிபார் என்ற அளவீட்டின்படி கணக்கிடப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 24 மில்லிபார் அளவுக்கு காற்றழுத்தம் குறைந்தால், அது பாம் சைக்ளோன் என்ற அதி தீவிர பனிப்புயலாக கருதப்படுகிறது. அமெரிக்காவின் வடமேற்கில் மோண்டானா துவங்கி கிழக்கு கடற்கரையில் உள்ள மைனே வரை 2,500 கி.மீ., நீளத்துக்கு 27 மாகாணங்களுக்கு அதிதீவிர பனிப்புயல் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரு பனிப்புயல்கள் அமெரிக்காவை தாக்கி உள்ளன. 33 சதவீத பரப்பை பனி மூடியுள்ளது. தற்போது வீசும் பனிப்புயலால், கொலராடோ மாகாணத்தின் ராக்கி மலைப்பகுதியில் ஒரு அடி உயரத்திற்கு பனி விழுந்ததாக தேசிய வானிலை சேவை மையம் தெரிவித்துள்ளது.
கன்சாஸ் சிட்டியில் 10 செ.மீ அளவும், செயின்ட் லுாயிசில் 7 செ.மீ., அளவும் பனி பதிவாகியுள்ளது. செயின்ட் லுாயிஸ் நகரில் பனி படர்ந்ததன் காரணமாக, நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் நேற்று பல இடங்களில் விபத்துகள் ஏற்பட்டன. இதன் காரணமாக வாகன ஓட்டிகளை மிகுந்த கவனத்துடன் வாகனத்தை இயக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




